Ads Area

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.


தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்

கொரோனா ஊரடங்கு  காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் திறக்கப்பட்டன. குறிப்பாக பொதுத் தேர்வெழுதும் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திலும், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்த நிலையில், தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை மாணவர்களும் பள்ளிகளும் அதிகம் எதிர்பார்த்திருந்தன.

 இது குறித்த இறுதி முடிவை தமிழக முதல்வர்தான் எடுப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் கடந்த வாரம் கூறியிருந்தார்.இது தொடர்பான ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள்  தேர்வெழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

 தமிழக சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

 கொர்ரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

 2020-21ஆம் கல்வியாண்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19ம் தேதி முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். 

 மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area